தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க, கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவர்களுடன் தொடர்பில் இருந்த 383 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 74 பேர் சுகாதாரப் பணியாளர்கள்.

நிபா வைரஸ் முதன்மையாக பழந்தின்னி வவ்வால்கள், பன்றிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடல் திரவங்கள் (உமிழ்நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் பரவுகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், மயக்கம், மூளை வீக்கம் ஆகியவை காணப்படுகின்றன. கேரள அரசு முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து, தனிமைப்படுத்தல் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு பழங்களை நன்கு கழுவி உண்ணவும், வவ்வால் கடித்த பழங்களை தவிர்க்கவும், கைகளை சோப்பால் கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரக் குழு கேரளாவுக்கு விரைந்து, தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இதையும் படிங்க: வரட்டா மாமே டுர்ர்ர்.. நெட்டிசன்கள் வச்சு கலாய்ச்ச பிரிட்டிஷ் போர் விமானம்.. தாய்நாடு புறப்பட தேதி குறிச்சாச்சு..!
தற்போது கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் பகுதியில் இருந்து தமிழக எல்லையான நாடுகாணி வழியாக அதிக அளவிலான வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, நோய் தாக்கத்தின் அறிகுறிகள் இருப்பது குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகியவற்றில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளிட்ட 20 வழித்தடங்களில் கேரளாவிலிருந்து வருவோரை தீவிரமாக பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பழங்களை நன்கு கழுவி உண்ணவும், வவ்வால் சுரப்புகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் நோய் பரவல் நிலையை பொது சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும், பதற்றமின்றி, விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஸ்டார்ட் ஆகாத போர் விமானத்தால் பெரும் அவமானத்தில் பிரிட்டன்.. ரகசியங்கள் கசிந்தால் அம்போ தான்!!