டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய தலைவர் பதவிக்கு நிதின் நபின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் கட்சியின் 12-வது தேசிய தலைவராக அவர் பொறுப்பேற்றுள்ளார். 45 வயதான நிதின் நபின், பாஜக வரலாற்றில் இதுவரை இருந்த தலைவர்களில் இளம் வயது தலைவர் ஆவார்.
ஜெ.பி.நட்டா தேசிய தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல்கள் காரணமாக புதிய தலைவர் தேர்வு தாமதமானது. நட்டாவின் பதவி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் பீகாரைச் சேர்ந்த நிதின் நபின் பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதிய தேசிய தலைவர் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜனவரி 19, 2026) நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித் ஷா, நிதின் கட்காரி உள்ளிட்டோர் கையெழுத்திட்ட முன்மொழிவு படிவங்கள் மற்றும் பல்வேறு மாநில தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரி லக்ஷ்மணிடம் வழங்கப்பட்டன. அனைவரும் ஒருமனதாக நிதின் நபின் பெயரை முன்மொழிந்தனர்.
இதையும் படிங்க: பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்?!! தீவிர ஆலோசனை!! ஜன., 20-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

இதையடுத்து, இன்று (ஜனவரி 20, 2026) டெல்லியில் நடந்த கூட்டத்தில் நிதின் நபின் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பாஜக முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
பீகாரைச் சேர்ந்த நிதின் நபின், அங்கு 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியவர். கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து வந்தவர் என்பதால், இந்த தேர்வு கட்சியில் புதிய தலைமுறை மாற்றத்தை குறிக்கிறது. 2026-க்குப் பிறகான தேர்தல்களில் பாஜகவின் அடுத்தக்கட்ட திட்டங்களுக்கு இது வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவின் புதிய தேசியத் தலைவராகிறார் நிதின் நபின்: போட்டியின்றித் தேர்வு! நாளை பதவியேற்பு