தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் செந்தமிழனை (அமமுக) ஆதரித்துத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சைதாப்பேட்டை பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்த அவர், திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மகளிர் பாதுகாப்பு குறித்துப் பேசிய ஜி.கே.வாசன், பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: "விஜய்க்குப் போடும் ஓட்டு பாஜாக-விற்கே!" - விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடி!

தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது மிக அவசியம்.
மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் குறிப்பிடுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று இந்தியா வலிமையான பாரதமாக உருவெடுத்துள்ளது. உலகெங்கும் போர்கள் நடைபெற்று வரும் சூழலிலும் நாம் பாதுகாப்பாக இருப்பதற்குப் பிரதமரின் ராஜதந்திரமே காரணம். விரைவில் இந்தியா வல்லரசாக மாறும்," எனப் புகழாரம் சூட்டினார்.
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை தொகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை என்றும், பல குறைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு இருந்தால் மட்டுமே திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்றும், அதற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "விஜய்யின் வாக்குறுதிகள் பட்ஜெட்டை விட அதிகம்!" - தஞ்சையில் அண்ணாமலை விமர்சனம்!