தமிழகத்தில் காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா பல இடங்களில் வழக்கமான உற்சாகத்தை இழந்துள்ளது. இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையடுத்து, கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ஆம் நாளை தமிழர்கள் ஆடிப்பெருக்கு விழாவாக சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் புதுமணத் தம்பதிகள் தாங்கள் திருமணத்தில் அணிந்த மாலைகளை ஆற்றில் விடுவதுடன், புதிய மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள். அதேபோல், திருமணமான பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து புதிய தாலிக்கயிறை அணிந்து, பழைய தாலிக்கயிற்றை ஆற்று மணலில் வைப்பதும் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லாததால், குழாய் மூலம் குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் காவிரி நீரில் புதுமணத் தம்பதிகள் மற்றும் பெண்கள் வழக்கம்போல் பூஜைகள் செய்து புதிய தாலிக்கயிறை அணிந்து வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் ஆறு வறண்டு காணப்படுவதால், ஆடிப்பெருக்கு விழா வழக்கமான களையை இழந்துள்ளது.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பட்டு கிராம மக்கள், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு, தங்களது பாரம்பரியத்தை பின்பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் குடும்பத்துடன் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஆலயத்தை நோக்கி மூன்று நாள் யாத்திரையை தொடங்கியுள்ளனர்.
புதுப்பட்டு கிராமத்தில் உள்ள சென்னியம்மன் கோயிலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவில் பங்கேற்று, தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி, பொங்கல் வைத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது அப்பகுதி மக்களின் நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இதனிடையே, ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் புனித நீராடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் 50 முதல் 100 கன அடி தண்ணீர் காவிரியில் திறப்பது வழக்கம் , ஆனால் மேட்டூர் அணையில் 73 அடி தண்ணீர் இருந்தும் மேட்டூர் அணையின் வலது பக்க காவேரியில் தண்ணீர் திறக்காததால் புனித நீராட வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது , அந்த தண்ணீர் நாளை அல்லது நாளை மறுநாள் மேட்டூர் அணை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
எனவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவில் காவிரியில் புனித நீராட வந்த மக்கள் கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். கடந்தாண்டு இதே நாளில் காவிரியில் 16,500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது , இதனால் மக்கள் கடந்தாண்டில் காவிரி கரையோரங்களில் மகிழ்ச்சியோடு புனித நீராடி வந்த நீராடி சென்றனர்.
ஆனால் இந்த ஆண்டு குறைந்த அளவே தண்ணீர் உள்ளதாலும் , ஆற்றினை சுத்தப்படுத்தாதாலும் மக்கள் நீராட முடியாமல் குடும்பத்தோடு வந்த பெரும்பாலானோர் திரும்பி சென்றனர்...
இதையும் படிங்க: நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய பங்கு நீரை பெற தவெக அரசுக்கு அன்புமணி கெடு!