மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது என்றார். அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லும் என சீமான் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: “அந்த வகையில் பார்க்க முடியாது...” - சி.எம்.விஜயை சீண்டிய சீமானுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி...!

தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவைக் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக தமிழக வெற்றிக்கழக அரசு ஏமாற்றி இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என்று சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!