தென்காசி மாவட்டத்தில், பட்டாசு ஆலைக்கு உரிமம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்துக்களை கேட்டு உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா நடுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
“நான் விவசாய பாசனப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நடுவப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான நிலங்கள் கரிசல் மண் விவசாய நிலங்களாக உள்ளது. இந்த நிலங்களை நம்பியே கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் அப்பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, இதற்காக விவசாய நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!
பட்டாசு தொழிற்சாலை அமைக்கப்பட்டால் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் மட்டுமின்றி, ரசாயனக் கழிவுகள் மூலம் மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளது, விவசாய நிலங்களின் வளம் பாதிக்கப்படக்கூடும்.
மேலும், பட்டாசு உற்பத்தியால் காற்று மாசுபாடு ஏற்பட்டு மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். அருகில் பறவைகள் மற்றும் வன உயிரினங்கள் வாழும் பகுதிகள் உள்ளதால், பட்டாசு ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பட்டாசு ஆலை அமைப்பதற்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நடுவப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சர்வே எண்களில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை பட்டாசு ஆலையை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி வி கார்த்திகேயன் ஆர் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை, பரிசீலனையில் தான் உள்ளது. என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்துக்களை கேட்டு அதன் பின்னர் உரிய முடிவு எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ விழா! உசிலம்பட்டிக்கு பதில் மதுரைக்கு இடம் மாற்றம்?! வெளியானது புதிய தகவல்!