சிதம்பரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா(60). மூதாட்டியான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதால், சந்திரா தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திராவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் அவரை இரு தினங்களாக காணவில்லை என நினைத்து வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது சந்திரா கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தார்.
அவர் இறந்து சுமார் 3 நாட்கள் இருக்கும் என தெரிகிறது. லேசாக துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அவர் சம்பவம் குறித்து மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மருதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: த.வா.க. நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்... பிரபல கூலிப்படை தலைவன், பாமக நிர்வாகி சரண்...!
பின்னர் தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த அவரது மகள் தீபலட்சுமி மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது தாயார் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடு மாயமாகி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் சந்தேகம் மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, இதில் உண்மையை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.
சந்திரா கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பதால் நகைக்காக யாரேனும் சந்திராவை கொலை செய்தனரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் மூதாட்டி சந்திரா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் போலீசார் சந்தேகப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் வேலை செய்யும் பசுபதி(29) என்ற இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நகைக்காக மூதாட்டியை தலையணையை அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி பசுபதியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி சந்திராவிடம் இருந்து திருடிய 2 பவுன் தங்கச் செயின் மற்றும் அரை பவுன் தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கொலை செய்யப்பட்ட சந்திராவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பசுபதி குடிக்க பணம் இல்லாததால் கடந்த 7 ஆம் தேதி இரவு தனியாக இருந்த சந்திராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு அவரை தலையணையால் முகத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.
அதை ஒரு வட்டி கடையில் வைத்து பணம் பெற்றுள்ளார். இந்த வட்டிக்கடை ரசீதை அவரிடம் இருந்து கைப்பற்றிய போலீசார், அடகு வைத்த நகைகளை மீட்டனர். சம்பவம் குறித்து போலீசார் பசுபதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!