2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) நிலைப்பாடு பெரும் சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது. பாஜக சார்பில் ஓபிஎஸ்ஸுக்கு இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் இதுவரை ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்க உள்ளார். இந்த மூவ் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. இதில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. டிடிவி தினகரனின் அமமுக ஏற்கனவே கூட்டணியில் இணைந்துவிட்டது. இப்போது ஓபிஎஸ்ஸை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் ஓபிஎஸ் தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறார்.
பாஜக தரப்பில் ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆப்ஷன்கள் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஆப்ஷன்: டிடிவி தினகரனின் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும். இரண்டாவது ஆப்ஷன்: சுயேச்சையாக பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். இவ்விரண்டில் ஒன்றை ஏற்றால் மதுரை, தேனி மாவட்டங்களில் 2 அல்லது 3 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பு வேணாமே? நமக்கே பொல்லாப்பா போகும்! மொழி அரசியலை தவிர்க்கும் திமுக அமைச்சர்கள்!!

ஓபிஎஸ் தரப்போ அதிமுகவில் மீண்டும் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்கவோ அல்லது இரட்டை இலை சின்னம் தரவோ விரும்பவில்லை. இதை பாஜகவிடம் தெளிவாக தெரிவித்துள்ளார். எனவே தான் பாஜக இரண்டு ஆப்ஷன்களை மட்டுமே வழங்கியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் "அதிமுகவில் அனைவரும் ஓரணியில் இணைந்து களமிறங்க வேண்டும்" என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் "ஓபிஎஸ் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். அவர் இணைவார் என்று நம்புகிறேன். அதிமுகவில் அவர் 3 முறை முதல்வராக இருந்துள்ளார். கட்சிக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமை உள்ளது. பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இன்று தேனியில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் பிறகு அவர் எந்த முடிவை அறிவிப்பார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைந்தால் தமிழக அரசியலில் பெரிய ட்விஸ்ட் ஏற்படும். அல்லது தனித்து போட்டியிடுவாரா? அல்லது வேறு அணியா? இந்த முடிவு 2026 தேர்தல் கணக்குகளை பெரிதும் பாதிக்கும்.
இதையும் படிங்க: சொன்னபடி தை பிறந்தாச்சு!! வழி பிறக்குமா? இன்று கூட்டணியை அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்? யாருடன் கை கோர்ப்பு?