தேனிக்குச் செல்லும் பயணத்தின் ஒரு பகுதியாகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் திரண்டு, அவருக்குச் சால்வை அணிவித்தும் மலர்க்கொத்துகள் வழங்கியும் வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
வரும் 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு, இதுவரை தமக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு ஏதும் வரவில்லை என ஓபிஎஸ் வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டணி விவகாரத்தில் நிலவும் இழுபறி குறித்த செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், அவரது இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்த ரகசியத்தை அவர் உடைக்கவில்லை என்றாலும், அழைப்பு வராதது குறித்த அவரது பதில் ஒருவித அரசியல் அழுத்தத்தையே வெளிப்படுத்தியது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் அணிக்கு அடுத்த அதிர்ச்சி..! இன்று திமுகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்?
தொடர்ந்து, அவரது முக்கிய ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள்" என ஒற்றை வரியில் முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், நீங்கள் திமுகவுக்குச் செல்வீர்களா?" எனச் செய்தியாளர் எழுப்பிய அதிரடி கேள்விக்கு, தனது புன்னகையுடன், உங்களைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுத்தான் எங்கேயும் போவேன் என்று பதிலளித்தார். இந்த பதில் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்திய அதேவேளை, அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
இதையும் படிங்க: “விவசாயிகள் மீது அடக்குமுறையா?” கறிக்கோழி பண்ணையாளர்கள் கைதுக்கு ஓ.பி.எஸ் கடும் கண்டனம்!