தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்று, இருமுறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கே.ஆர். பெரியகருப்பன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த முடிவு திமுகவின் பாரம்பரிய கோட்டையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்ற நிலையில், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்பு 30 வாக்குகள் முன்னிலையில் இருந்த பெரியகருப்பன், இறுதியில் ஒரு வாக்கால் தோற்றுப் போனது, தேர்தல் வரலாற்றில் அரிதான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. திருப்பத்தூர் தொகுதி திமுகவுக்கு நீண்டகாலமாக வலுவான கோட்டையாக இருந்து வந்தது.

2006 முதல் பெரியகருப்பன் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், இந்தத் தோல்வி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்தச் சூழலில், சென்னை செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் தொகுதி முடிவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பெரிய கருப்பன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்குச்சீட்டால், தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாக பெரிய கருப்பன் தரப்பில் வாதிட்டப்பட்டது.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்ற V.S. பாபு..! முதல்வர் விஜயை கட்டியணைத்து பெருமிதம்.!
மேலும், தபால் வாக்குச்சீட்டு தொகுதி மாறி அனுப்பினால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்களை தேர்தல் ஆணையம் எதிர்த்த நிலையில், தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால் தேர்தல் வழக்காகத்தான் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் இவ்வழக்கில் தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: "முதல்முறையாக"...! தர்மபுரி எம்எல்ஏவாக பதவியேற்றார் சௌமியா அன்புமணி..!