நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலைகள் விரைவில் கணிசமாக உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் உள்நாட்டு எரிபொருள் விலைகளை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு விலை உயர்வு வரும் என எதிர்பார்ப்பு நிலவியது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், “தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு விலையை உயர்த்தாமல் இருந்தது” என விமர்சித்திருந்தனர். ஆனால், அப்போது மத்திய அரசு தரப்பில் “தற்போதைக்கு விலை உயர்வு இல்லை” என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று திடீரென வணிக நோக்கிலான காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு லிட்டருக்கும் 4 முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: இதோ ஆரம்பிச்சிட்டானுங்கல்ல!! பெட்ரோல், டீசல் விலை உயர்வு!! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு!
அதேபோல், சமையல் காஸ் சிலிண்டர் விலை 40 முதல் 50 ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக எரிபொருள் விலை உயர்வு ஏற்படும்.

மேற்காசியப் பகுதியில் தொடரும் பதற்றம் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், ஒரு வாரத்திற்குள் விலை உயர்வு அறிவிக்கப்படும் என்கிற தகவல்கள் வலுவாக உள்ளன.
இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தால், போக்குவரத்துச் செலவுகள் பெருமளவு அதிகரிக்கும். இதனால் காய்கறி, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் சிரமமடையும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் இந்த உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும்.
மத்திய அரசு இந்த விஷயத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சர்வதேசச் சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் வகையில் மாற்று எரிசக்தி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்களும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!