புதுடெல்லி: டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வளர்க்கப்படும் மாடுகள், கன்றுகள் மற்றும் மயில்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பரந்த தோட்டம் அமைந்துள்ளது. அங்கு மாடுகள் மற்றும் கன்றுகள் உள்ளிட்ட விலங்குகளை பிரதமர் மோடி பராமரித்து வருகிறார். அவற்றுடன் நேரம் செலவிடும் காட்சிகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காலையில் தனது இல்லத்தில் உள்ள மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு அவர் பாசத்துடன் உணவு வழங்குகிறார். தொடர்ந்து, தோட்டத்தில் சுற்றித்திரியும் மயில்களுக்கு தனது கைகளில் தானியங்களை வைத்து உணவளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!

இந்த வீடியோவுடன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தினமும் காலையில் தனது “நண்பர்களுக்கு” உணவு வழங்குவது வழக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அன்றைய தினம் தான் செங்கோட்டைக்குச் செல்வதற்காக விரைவாகப் புறப்படுவதை மாடுகளும் மயில்களும் உணர்ந்துகொண்டது போல தன்னைச் சுற்றி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் போல, அந்த தருணமும் தனக்கு சிறப்பானதாக இருந்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது இல்லத்தில் வளர்க்கும் கன்றுகள் தொடர்பான பதிவுகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, அவரது இல்லத்தில் ஒரு மாடு கன்று ஈன்றபோது, அதன் நெற்றியில் காணப்பட்ட தனித்துவமான குறியை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கன்றுக்கு ‘தீப்ஜோதி’ என பெயரிட்டதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
அந்தக் கன்றுடன் பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்த காட்சிகளும் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன. தற்போது மாடுகள் மற்றும் மயில்களுக்கு அவர் உணவளிக்கும் புதிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்! பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!