பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான் சென்றுள்ளார். விமான நிலையத்தில் ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி பேசுகையில், “எனது ஜோர்டான் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஜோர்டான் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளது.
காசா பிரச்னையில் ஆரம்பம் முதலே ஜோர்டான் சுறுசுறுப்பாக பங்களித்து வருகிறது. இப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும் என்று நம்புகிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான ஜோர்டானின் நிலைப்பாடு மனிதகுலத்துக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது” என்று பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்!! ஜோர்டன் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பேசுகையில், “பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கு இடையிலான பல ஆண்டு கால நட்பையும் பரஸ்பர மரியாதையையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவும் ஜோர்டானும் வலுவான கூட்டாண்மை கொண்டுள்ளன. தொழில், விவசாயம், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த முடியும்” என்றார்.
இரு தலைவர்களும் பயங்கரவாத எதிர்ப்பு, பிராந்திய அமைதி, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களை ஆலோசித்தனர். இந்தப் பயணம் இந்தியா - ஜோர்டான் உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை! ஜோர்டான் மன்னருடன் ஒரே காரில் பயணம்!