இந்திய அரசியலில் பெண்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அவர் இன்று உருக்கமான மற்றும் முக்கியமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் சட்டமாக்கி, அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்க வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு தொடங்குகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமர்வில் அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து 'ஒரே குரலில்' இணைய வேண்டும் எனப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவது எப்போது சாத்தியமாகும் என்ற கேள்விக்கு இக்கடிதத்தில் பிரதமர் பதிலளித்துள்ளார். வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அதனுடன் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் கண்டிப்பாக மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்தப்பட வேண்டும். இதுவே தேசத்தின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!

பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது ஒரு கட்சியின் சாதனை அல்ல, அது ஒட்டுமொத்த தேசத்தின் பெருமை. தசாப்தங்களாக நிலுவையில் உள்ள இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு அனைத்துத் தலைவர்களும் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் இந்தக் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்து வரும் நிலையில், தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான நிபந்தனைகள் குறித்துச் சில கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. இருப்பினும், சிறப்பு அமர்வில் இது குறித்து ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாரி சக்தி (Nari Shakti) எனப்படும் பெண் சக்தியை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முன்னிறுத்த மத்திய அரசு எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை, 2029 தேர்தல்களில் இந்திய அரசியலின் முகத்தையே மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் சந்திப்பு! மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி!