சமூக நீதியைப் பற்றி என்னால் மட்டுமே பேச முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவில் உட்கட்சி மோதலால் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்து வரும் நிலையில், தைலாபுரத்தில் இன்று (மே 21) நடைபெற்ற சமூக நீதிப் பேரவைக் கூட்டத்தையும் புறக்கணித்தார். எல்லாக் கூட்டங்களிலும் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒரு சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே தொடர்ச்சியாக கலந்து கொண்டுள்ளனர். நான்கு கூட்டங்களையும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து புறக்கணித்துள்ளது பாமகவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்துக்குப் பிறகு ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முந்தைய காலத்தில் வன்னியர் சமுதாயத்தில் ஊருக்கு ஒருவர்கூட படிக்காமல் இருந்தார்கள். பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும் என்றால், இடது கை பெருவிரல் ரேகையை வைப்பார்கள். இப்படிப்பட்ட சமுதாயத்தில், ஆயிரமாயிரம் வழக்கறிஞர்களை உருவாக்கி இருக்கிறேன். நீதிபதிகளையும் உருவாக்கி இருக்கிறேன். இவர்கள் அனைவரும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில், இடஒதுக்கீட்டில் படித்தவர்கள்தான்.

என்னுடைய உழைப்பால், போராட்டத்தால், வன்னியர் சமூகம் மட்டுமின்றி எம்பிசி பிரிவில் உள்ள 115 சமூகத்தினரும் பயன் பெற்றுள்ளனர். அதனால், சமூக நீதியைப் பற்றி என்னால் மட்டுமே பேச முடியும். மற்றவர்களால் பேச முடியாது. அதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லை. இனிமேல் நடைபெறும் கூட்டங்களில் அன்புமணி கலந்துகொள்வார். எனக்கும், அன்புமணிக்கும் மனகசப்பு என எப்போதும் நான் சொல்வதில்லை. இனிப்பான செய்திகளைத்தான் சொல்லி இருக்கிறேன். நான் மருத்துவராக இருந்தாலும், கசப்பான மருந்து கொடுப்பதில்லை. இனிப்பான மருந்துதான் கொடுப்பேன்.
இதையும் படிங்க: உழவர்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லை... பொங்கி எழுந்த அன்புமணி!!

தைலாபுரத்தில் வரும் 25-ம் தேதி சமூக முன்னேற்ற சங்க கூட்டம் நடைபெறும், அப்போது இது குறித்து பேசுகிறேன்,” என்றார். நீச்சல் வீடியோ குறித்த பதிலளித்த ராமதாஸ், “சிங்கத்தின் கால்கள் பழுதும் படவில்லை, சீற்றமும் குறையவில்லை. கால்கள் பழுதுபடாததால் நீச்சல் அடித்துள்ளேன்,” என்று அவர் கூறினார். இச்சந்திப்பில், அன்புமணி ராமதாஸ் தொடர்பான கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் ராமதாஸ் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கந்து வட்டியும், அடகு கடை வியாபாரமும் ஜோராக இருக்கும்.. ரிசர்வ் வங்கி விதிகளை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்..!