பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வனின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் தாய்மார்கள் மீது காவல்துறையினர் கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையும், சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள் காலால் மிதித்து அத்துமீறிய கொடூர மனித உரிமை மீறலையும் மிக வன்மையாகக் கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அராஜகத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மாணவனின் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது.
மதுரை ஆனையூர் கூடல் புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று அப்பகுதியில் உள்ள முட்புதர்கள் நிறைந்த குட்டைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மாணவனின் மரணத்தில் கடுமையான சந்தேகங்கள் உள்ளதாகவும், அவன் திட்டமிட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மகனின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, வழக்கை முறையாகக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி, மாணவன் உயிரிழந்து ஒரு வார காலம் கடந்த நிலையிலும் அவனது உடலை வாங்க மறுத்துத் தாய் யோகலட்சுமி கண்ணீருடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்தில் எதிர்த்து பேசிய மகன்... ஊர் மக்கள் முன்னால் பட்டியலின தாய்க்கு நேர்ந்த கொடூரம்... பறந்தது அதிரடி உத்தரவு...!

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், கொதிப்படைந்த உறவினர்களும் கிராம மக்களும் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று நீதி கேட்டு அமைதி வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் கலந்துகொண்ட எளிய பெண்கள் மற்றும் தாய்மார்கள் மீது ஈவுஇரக்கமின்றி மிக மோசமான முறையில் தடியடி நடத்தித் தாக்குதல் நடத்தினர்.
இதில் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்த ஒரு பெண்ணின் கழுத்துப் பகுதியை, பெண் காவலர்கள் பூட்ஸ் கால்களால் ஆவேசமாக மிதித்து அமுக்கிய நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகித் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர அத்துமீறலைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாகப் போராடிய சாமானிய மக்கள் மற்றும் பெண்கள் மீது காவல்துறையினர் நடத்தியுள்ள இந்த அசுரத்தனமான தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
சாலையில் விழுந்து கதறிய ஒரு பெண்ணின் கழுத்தை பெண் காவலர்களே காலால் மிதிக்கின்ற கொடூரக் காட்சி நாகரிக சமுதாயத்தையே தலைகுனிய வைத்துள்ளது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, சட்டத்தையும் தர்மத்தையும் காலில் போட்டு மிதித்து இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது மிகுந்த கவலையளிக்கிறது. இது மிக வன்மையான கண்டனத்திற்குரியது என்று பொங்கியுள்ளார்.
மேலும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ள அவர், மக்களாட்சித் தத்துவத்திற்கு விரோதமாக, அமைதி வழியில் நீதி கேட்டுப் போராடிய மக்கள் மீது இத்தகைய அராஜகத் தாக்குதலை நடத்திய காவல்துறையினர் மீது அரசு உடனடியாக பாரபட்சமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், மாணவன் தமிழ்ச்செல்வனின் மர்ம மரணத்தை உடனடியாகக் கொலை வழக்காகப் பதிவு செய்து, அதன் பின்னணியில் உள்ள உண்மைக் குற்றவாளிகளைக் கூண்டோடு கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் தமிழ்நாடு அரசை மிகத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!