கேரளா வேணாம்! தமிழ்நாட்டை மட்டும் பாத்துக்குங்க!! பொறுப்பு கவர்னர் அர்லேகருக்கு அமித்ஷா முழு அதிகாரம்?!
தமிழகத்திற்கு நிரந்தர கவர்னராக, ராஜேந்திர அர்லேக்கர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தின் நிரந்தர கவர்னராக ராஜேந்திர அர்லேக்கர் நியமிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரளா கவர்னராக இருக்கும் அவர், தற்போது தமிழகத்தின் கூடுதல் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நியமனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 12-ம் தேதி தமிழக கவர்னராக பொறுப்பேற்ற ராஜேந்திர அர்லேக்கர், தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்ட சிக்கலான நிலையை சமாளித்த விதம் மத்திய அரசுக்கு பெரும் திருப்தியை அளித்துள்ளது.
த.வெ.க. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தபோது ஏற்பட்ட அசாதாரண சூழலை அவர் அமைதியாகவும், திறமையாகவும் கையாண்டதை உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவரது பதவிக் காலத்தை நீட்டிக்கும் யோசனையும் வலுப்பெற்றது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!
ராஜேந்திர அர்லேக்கர் 2021 ஜூலை 13-ம் தேதி ஹிமாச்சல் பிரதேச கவர்னராக பொறுப்பேற்றார். வரும் 13-ம் தேதியுடன் அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவடைகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 1-ம் தேதி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபோது, பதவி நீட்டிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அவரது செயல்பாடுகள் மத்திய அரசுக்கு முழு திருப்தி அளித்துள்ளதால், தமிழகத்துக்கு நிரந்தர கவர்னராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, பல மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றப்பட உள்ளனர். இந்தச் சூழலில் தமிழகத்துக்கு ராஜேந்திர அர்லேக்கரை நிரந்தரமாக நியமித்துவிட்டு, கேரளாவுக்கு தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவரை கவர்னராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனாலேயே தமிழக விவகாரங்களில் அவர் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், குறிப்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனப் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
ராஜேந்திர அர்லேக்கரின் நிர்வாக அனுபவமும், அரசியல் நடைமுறை அறிவும் தமிழகத்துக்கு பயனுள்ளதாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
அவரது நியமனம் உறுதியானால், தமிழக-மத்திய உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகும் என்று அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிமுகவில் தினகரனை சேருங்கள்!! அண்ணாமலையுடன் சேர்ந்து பயணியுங்கள்! எடப்பாடிக்கு குவியும் அட்வைஸ்!