சென்னையின் மெரினா கடற்கரைக்கு காணும் பொங்கல் என்றால் தனி ஒரு மகத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான காணும் பொங்கலன்று காலையிலிருந்தே குடும்பத்துடனும், நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மக்கள் அலைமோதுவார்கள். இந்தியாவிலேயே மிக நீளமான நகர்ப்புற கடற்கரையான மெரினாவில், கடல் அலைகளின் சத்தத்திற்கு நடுவே குழந்தைகள் ஓடி விளையாடுவது, பெரியவர்கள் காற்றோட்டமான இடத்தில் உட்கார்ந்து பேச்சு கொடுப்பது, சிலர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வது என்று ஒரு தனி உற்சாகம் நிலவும். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த 2026-ஆம் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
காலை 8 மணியிலிருந்தே கூட்டம் தொடங்கி மதியம் வரை உச்சத்தை தொடும். அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை முழு கடற்கரையும் மனிதத் தலைகளால் நிரம்பி வழியும். குழந்தைகளைத் தேடும் பெற்றோர்கள், கடற்கரையில் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள், பழைய நண்பர்களை சந்திக்கும் மகிழ்ச்சி என்று எல்லாம் கலந்த ஒரு திருவிழா போன்ற காட்சி அரங்கேறும்.ஆனால் இந்த மகிழ்ச்சியான கூட்டத்தை சீராகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு சென்னை பெருநகர காவல் துறை ஆண்டுதோறும் மிகுந்த கவனம் செலுத்துகிறது.

இந்த ஆண்டு காணும் பொங்கலுக்காக சுமார் 16,000 காவலர்களும், கூடுதலாக 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரை மட்டுமின்றி எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட மற்ற இடங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரையின் மணல் பகுதியில் அண்ணா சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 13 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உயரமான இடங்களில் இருந்து முழு பகுதியையும் கண்காணிக்க உதவும். மேலும் CCTV கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறும். ட்ரோன்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: தீவிரமா களமாடனும்..! 200 தொகுதிகளுக்கும் மேல நம்ம தான்..! முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!
கடலுக்குள் இறங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக்கு முன்பாக சவுக்கு கட்டைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, அதைத் தாண்டி யாரும் செல்ல முடியாதபடி கண்காணிக்கப்படுகிறது. கடலில் மூழ்கும் அபாயத்தைத் தவிர்க்க கடற்கரை பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 85 பேர், 200-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற மீனவர்கள் மற்றும் தன்னார்வலர் நீச்சல் வீரர்கள் காத்திருப்பில் இருப்பார்கள். மோட்டார் படகுகள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை உடனடி உதவிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க, உதவி மையங்களில் பெற்றோர்-குழந்தை விவரங்கள் அடங்கிய ஐடி அட்டைகள் அல்லது wrist bands வழங்கப்படும். மேலும், போக்குவரத்து ரீதியாகவும் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போக ரெடியா மக்களே..!! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!