புனே: பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவுகான், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்விராஜ் சவுகான் அண்மையில் பேசிய போது, “ஆப்ரேஷன் சிந்தூரின் முதல் நாளில் இந்திய ராணுவம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” என்று கூறியிருந்தார். இக்கருத்துக்கு பாஜக உள்ளிட்ட ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்திய ராணுவத்தை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், நாட்டின் நலன்களைவிட ராணுவத்தை இழிவுபடுத்துவதே காங்கிரஸுக்கு பழக்கமாகிவிட்டதாகவும் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் கடுமையாகக் குற்றம் சாட்டினார். பிரித்விராஜ் சவுகான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை சுளுக்கெடுத்த ரபேல் விமானி ஷிவாங்கி! இந்திய விமானப்படையில் புதிய பொறுப்பு!!
இந்நிலையில், டிசம்பர் 17 அன்று புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரித்விராஜ் சவுகான், “இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது: “பஹல்காம் சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும். ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான முழு விபரங்களையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும். லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அணுசக்தி தனியார்மயமாக்கல் மசோதா மற்றும் வக்ஃப் மசோதா ஆகியவற்றில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே எனது கருத்துகளை பெரிதுபடுத்துகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
பிரித்விராஜ் சவுகானின் இந்தப் பதிலடி பாஜகவுக்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. ராணுவ நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சைகள் கேள்வி எழுப்புவது ஜனநாயக உரிமை என்று காங்கிரஸ் தரப்பில் வாதிடப்படுகிறது. அதேநேரத்தில், ராணுவத்தின் மனோதிடத்தைப் பாதிக்கும் வகையில் பேசுவது தேச விரோதம் என்று பாஜக தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கியமான ராணுவ நடவடிக்கையாகக் கருதப்படும் நிலையில், இவ்விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எங்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்!! மீண்டும் இந்தியாவை வம்பிழுக்கும் அசிம் முனீர்!