கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலை பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் திருச்சி மாவட்ட செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபஸ்டின் ஆகியோர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக கூறினார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகவியலாளர்கள், மக்கள் நலன் கருதி சமூக ஆர்வலர்களுடன் இணைந்து செய்தி சேகரிக்க முற்பட்டபோது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன், சகோதரர்கள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அடியாட்கள் செய்தியாளர்களை மிகக் கொச்சையான வார்த்தைகளால் திட்டி, கொலை வெறித் தாக்குதலை நடத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிரிமினல்களுக்கு ஆளுங்கட்சி அடைக்கலம்..! தீய சக்தி திமுகவை ஒடுக்குவோம்... இபிஎஸ் சூளுரை..!

தங்களது சட்டவிரோதச் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் ட்ரோன் உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இனிமேல் இந்தப் பக்கம் வந்தால் கொன்று புதைத்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதிகாரப் பலத்தை வைத்துக்கொண்டு, கனிமவளங்களைச் சூறையாடுவது மட்டுமின்றி, அதனைத் தட்டிக்கேட்கும் ஊடகவியலாளர்கள் மீதே கை வைப்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
எனவே, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற காரணமாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதலில் சேதமடைந்த ஊடக உபகரணங்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்...! மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு..! அரசாணை வெளியீடு..!