புதுச்சேரியில் ஆண்டு தோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. மின்துறையின் வரவு செலவு கணக்குகளை கணக்கிட்டு கட்டணத்தை உயர்த்த கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கோரிக்கை வைக்கும். இதைத்தொடர்ந்து ஆணையம் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்டு கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்கும்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு வழக்கமாக அமலுக்கு வரும். இந்த நிதியாண்டிற்கான (2024-25) கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த புதுவை மின்துறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. ஜனவரி மாதத்தில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.இதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் உயர்ந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்... தீபாவளி பரிசு கொடுத்த முதல்வர் ரங்கசாமி..!!
இந்நிலையில் தற்போது வீடுகளுக்கான மின் கட்டணத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 100 யூனிட்கள் வரையிலான நுகர்வுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.70 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.2.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40ல் இருந்து ரூ.6 ஆகவும். 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
"மின்சார உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோக செலவுகள் உயர்ந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று மின்சாரத்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் விளக்கமளித்தார். மேலும் புதுச்சேரியில் மின்சாரம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்வை மானியமாக அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த உயர்வு சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டு நுகர்வோரை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 100 யூனிட்கள் வரை மட்டும் பயன்படுத்தும் குறைந்த வருமான குடும்பங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, மின்சாரத்துறை இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத மின்சார பில்களில் இந்த மாற்றம் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 5 நாள் தொடர் லீவு.. மாணவர்கள் குஷியோ குஷி..!! இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுச்சேரி அரசு..!!