புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்த அதிர்ச்சி வழக்கில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உரிமம் இல்லாத போலி மருந்து தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற முக்கிய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் பிரபல நிறுவனங்களின் மருந்துகளை போலியாக தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய சோதனையில் நவீன இயந்திரங்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தொடக்கத்தில் இருவரை கைது செய்தனர். பின்னர் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜா, ஐபிஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 15 கூட்டாளிகளுடன் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு வேட்டி, சேலை உண்டா? ரொக்கம் எவ்வளவு? புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், உரிமம் இல்லாத 7 தொழிற்சாலைகள் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து பெருமளவிலான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்ததும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதால் தேசிய அளவில் விசாரணை தேவை என்று கருதி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை திடீரென சென்னையில் இருந்து தில்லி சென்ற துணைநிலை ஆளுநரின் பயணத்துக்குப் பிறகு, மத்திய அரசு வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு ஆவணங்களை சிபிஐக்கு ஒப்படைக்க உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜா மீண்டும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலி மருந்துகள் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விரிவான விசாரணையின் மூலம் அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி!! இந்தியாவில் அவலம்! ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை வார்னிங்!