முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்பது பெயரில் மட்டுமே மதச்சார்பின்மையை வைத்துக்கொண்டு செயல்பாட்டில் முழுமையான குழப்பத்தில் உழலும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும், இது கொள்கையோ சமூகநீதியோ அற்ற வெறும் குழப்பக் கூட்டணி என்றும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
சென்னையில் தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணிக்கான அதிகாரப்பூர்வப் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, அக்கட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், கூட்டணிக் கட்சிகளின் இரட்டை வேடத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிற்கான இடைத்தேர்தலை முன்னிட்டு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று ஒரு கூட்டணியை அவசர அவசரமாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) போன்ற மதவாதக் கட்சிகளைத் தங்களது கூட்டணியில் மடியில் கட்டிக்கொண்டு, இதற்கு எப்படி 'மதச்சார்பற்ற கூட்டணி' என்று பெயர் சூட்ட முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் மட்டும் வைத்துக் கொள்ளும் கவர்ச்சிகரமான விளம்பர அடையாளம் அல்ல; மாறாக அது அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்" என்று நேரடியாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: இண்டி கூட்டணியின் ஒரு பகுதிதான் இந்த கூட்டணி.. ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: மாணிக்கம் தாகூர் அதிரடி!

மேலும் கூட்டணிக் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் குறித்து விளாசிய அவர், "காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேசிய அளவில் 'இண்டி' (I.N.D.I.A.) கூட்டணியில் நீடிக்கின்றனவா, இல்லையா? மாநிலத்திற்கு ஒரு கூட்டணி, தேசிய அளவில் வேறு கூட்டணி என ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்கும் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை இவர்கள் எடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற நேரடிக் கேள்விக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறுகிறது. மாணிக்கம் தாகூர் போன்ற முன்னணித் தலைவர்களே இதற்குத் தெளிவான பதிலைச் சொல்ல முடியாமல் பதுங்குவது, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் முதுகெலும்பே இல்லை என்பதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கடந்த கால நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், "இலங்கையில் கொத்துக்கொத்தாகத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை காலகட்டத்தில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துத் தீர்த்தவர்கள் தான் இதே வைகோவும் திருமாவளவனும். ஆனால், இன்று அதே காங்கிரஸைக் கட்டியணைத்து ஆதரவாக நிற்பது ஏன்? அன்று பேசியது வெற்று அரசியலா அல்லது இன்று செய்வது சந்தர்ப்பவாதக் கூட்டணிக் கூத்தா? மேலும், மாநில உரிமைகளைக் காக்கவே இந்தக் கூட்டணி என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்; ஆனால், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர் உரிமையைக் கூட கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸிடமிருந்து தமிழகத்திற்குப் பெற்றுத்தர இவர்களால் திராணியில்லை. அப்படிப்பட்டவர்கள் மாநில உரிமையைக் காப்பாற்றுவோம் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் கூற முடியும்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளரில் குழப்பம், மாநில உரிமைகளைக் காப்பதில் தோல்வி என அனைத்திலும் தோல்வியடைந்த இக்கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இது மனிதாபிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற ஒரு அப்பட்டமான 'குழப்பக் கூட்டணி' என்றுதான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக கூட்டணி பெயர் அறிவிப்பு: 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' தலைவராக முதல்வர் விஜய் தேர்வு!