காங்கிரஸ் கட்சியில் உள்குத்து மற்றும் கோஷ்டி பூசல் சகஜமான விஷயம் என்றாலும், சமீபத்தில் நடந்த ஒரு உள்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிட்ட தமிழரான மீனாட்சி நடராஜன், கடைசி நேரத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பதவியை இழந்தார். இந்த சம்பவத்தில் ராகுல் காந்திக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவரும், மத்தியப் பிரதேசத்தில் தமிழ் வேர்களைக் கொண்டவருமான மீனாட்சி நடராஜன், எளிதாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய நிலையில் இருந்தார். ஆனால், தேர்தல் நடைபெறும் நேரத்தில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தெலுங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை மறைத்ததாகக் கூறி தேர்தல் அதிகாரி இந்த முடிவை எடுத்தார்.
இந்த வழக்கு வெறும் நோட்டீஸ் மட்டுமே என்றும், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் மீனாட்சியின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருப்பினும், தேர்தல் ஆணையம் அதை ஏற்கவில்லை.
இதையும் படிங்க: மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்டியின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

மீனாட்சி தெலுங்கானா சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் பார்வையாளராக இருந்தவர். அங்கு முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் அவருக்கு மோதல் இருந்ததும் இந்த சம்பவத்துக்கு பின்னணியாகக் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோரே இந்த உள்குத்துக்கு பின்னால் இருப்பதாக ராகுல் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மேலும், பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, “இந்த வழக்கை பற்றி பாஜகவுக்கு தெரிவித்தவர்கள் தெலுங்கானா காங்கிரஸ்காரர்கள்தான்” எனக் கூறியது ராகுலின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் உள் பூசலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மீனாட்சி நடராஜனின் பெற்றோர் தமிழகத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நடைபெறும் உள்குத்துகள் கட்சியின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்த சம்பவம் காங்கிரஸ் தலைமையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த வருஷம் 7 மாநிலங்களில் தேர்தல்! அசூர பலத்தில் பாஜக! என்ன செய்யப்போகிறார் ராகுல்காந்தி!