தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சிப் பிரச்சினைகளே மிகப்பெரிய தடையாக உள்ளதாக, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் பங்கேற்று, மாவட்டத் தலைவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறார்.
இன்று காலை பயிற்சி முகாமுக்கு வருகை தந்த ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடினார். உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?
அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து, அவர்களுடன் இணைந்து குடும்பப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் தலைவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சிப் பூசல்களும், அணிகளாக செயல்படும் மனப்பான்மையும் முக்கிய தடையாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கட்சிக்கு விசுவாசமாக இல்லாத தலைவர்களிடம் காங்கிரஸ் கட்சியும் விசுவாசம் காட்டாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
கட்சிக்கு உரிய விசுவாசத்துடன் செயல்படாத காரணத்தினால்தான் பல முன்னாள் மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர்கள், உட்கட்சிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!