ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். 'எச்-பைல்ஸ்' என்று அழைத்து நிருபர் சந்திப்பில் ஆதாரங்களை வெளியிட்ட ராகுல், தேர்தல் ஆணையம் (இசிஐ) பாஜகவுடன் சேர்ந்து 'ஓபரேஷன் சர்கார் சோரி' என்ற திட்டத்தால் ஜனநாயகத்தை அழித்ததாகக் கூறினார். இதற்கு இசிஐ திட்டவட்டமாக மறுத்து, எந்த புகாரும் இல்லை என்று தெரிவித்தது.
இந்தப் பரபரப்புக்கு மத்தியில் ராகுல்காந்திக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரம், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதை 'பொய் பிரச்சாரம்' என்று கிண்டலடித்துள்ளார். பீகார் தேர்தலுக்கு முன் வெடித்த இந்த அரசியல் போட்டி, தேர்தல் முறைகேடுகள் குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
ராகுல் காந்தியின் நிருபர் சந்திப்பு நவம்பர் 5 அன்று நடந்தது. அவர், ஹரியானா வாக்காளர் பட்டியலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்ததாகக் கூறினார். ஒரு பிரேசிலியன் மாதிரியின் படம் 10 சாவடிகளில் 22 தடவை வெவ்வேறு பெயர்களுடன் பயன்படுத்தப்பட்டதாகவும், 5.21 லட்சம் இணைக்கப்பட்ட வாக்காளர்கள், 93,174 செல்லாத முகவரிகள், 19.26 லட்சம் 'பல்க்' வாக்காளர்கள் இருந்ததாகவும் ஆதாரங்களுடன் காட்டினார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி குற்றச்சாட்டு ஆதாரமற்றது!! வாக்குதிருட்டு புகார்!! தேர்தல் அதிகாரி விளக்கம்!
"எக்ஸிட் போல், ஓபினியன் போல் அனைத்தும் காங்கிரஸ் வெற்றி பெறும் என காட்டியது. ஆனால், இசிஐ-பாஜக சதியால் நாங்கள் தோற்றுவைக்கப்பட்டோம். 8 வாக்காளர்களில் ஒருவர் போலி – 12.5%!" என்று அவர் கோபமாகப் பேசினார். இசிஐ, இதை 'அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு' என்று மறுத்தது.
"வாக்காளர் பட்டியலுக்கு எதிராக எந்த மேல் முறையீடும் இல்லை. 90 தொகுதிகளில் வெறும் 22 தேர்தல் மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன" என்று தெரிவித்தது. ஹரியானா முதல் தேர்தல் அதிகாரி, விரிவான பதிலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக ஆதரவு தெரிவித்தார். சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஸ்டாலின், "பாஜகவின் சமீபத் தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மை மீண்டும் சந்தேகத்திற்குரியது. என் சகோதரர் ராகுல் வலுவான ஆதாரங்களுடன் ஹரியானாவில் ஓட்டு திருட்டை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் முறைகேடுகளைத் தாண்டி, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து மக்களின் தீர்ப்பைத் திருடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
SIR (சிறப்பு தீவிர திருத்தம்) என்ற போர்வையில் மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்படுகிறது. பீகாரும், ஹரியானாவும் சான்று. இவ்வளவு ஆதாரங்களுக்கும் இசிஐ விளக்கம் தராதது வேதனை" என்று குற்றஞ்சாட்டினார். ஸ்டாலின், தமிழ்நாட்டில் SIR-ஐ எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் உத்தியை வலுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார். "பீகாரில் தோல்வி உறுதியான விரக்தியில், வழக்கம் போல 'ஓட்டு திருட்டு' என்ற பொய்யைப் பரப்பியிருக்கிறார் ராகுல். பீகாரில் 'என் ஓட்டு நீக்கப்பட்டது' என்று யாரும் புகார் செய்யவில்லை. இசிஐ அறிவித்ததும் அவரது பொய் அம்பலமானது. இப்போது ஹரியானாவில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டுகள். இதை யார் ஆராயப் போகிறார்கள்? அடித்து விடுவோம்!" என்று அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தங்களை அரசியல் கட்சிகளின் சாவடி முகவர்கள் கண்காணிப்பதாகவும், SIR-ஆல் பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்கள் (இண்டி கூட்டணியின் 'ஓட்டு வங்கி') நீக்கப்படுவதால் அவர்கள் எதிர்ப்பதாகவும் வானதி விளக்கினார். "பொய்களை முதலீடாக அரசியல் செய்யும் ராகுலுக்கு, பொய்களைப் பரப்பியே ஆட்சி செய்யும் திமுக தலைவர் ஆதரவு தருவது ஆச்சரியமில்லை. பொய்க்கு பொய் சாட்சி! ஆதாரம் கேட்டால் ஓடி ஒளிந்து, தேர்தல் வந்தால் தெருக்களில் பொய் பரப்புவது ராகுலுக்கு வாடிக்கை. இந்திய மக்கள் அவரையும், கூட்டணியையும் நிராகரிப்பார்கள்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ராணுவத்தில் இட ஒதுக்கீடா? அராஜகத்தை கட்டவிழத்துவிட பாக்குறீங்களா? ராகுலுக்கு ராஜ்நாத் வார்னிங்!