தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி மற்றும் குறைந்த உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) காரணமாகவே இந்த மழை நிலை தொடர்கிறது.
இன்று தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று (40-50 கி.மீ. வேகம்) மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாளும் இதே போன்ற வானிலை நிலவும். மேலும் சில மாவட்டங்கள் (திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்டவை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளன. 11ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும்.
இதையும் படிங்க: மறக்காம குடை எடுத்துக்கோங்க மக்களே... காலையிலேயே 19 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் கனமழை...!
12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் நிலையில், கன்னியாகுமரி முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான சாத்தியம் அதிகம். 14ஆம் தேதியன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும் மழை விரிவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை: இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இன்று 34-35 டிகிரி செல்சியஸ் வரையிலும், நாளை 33-34 டிகிரி வரையிலும் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரியை ஒட்டி இருக்கும்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மழை எச்சரிக்கையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்று மற்றும் இடி மின்னல் ஏற்படும் சமயங்களில் மரங்கள், உயரமான கட்டிடங்கள், மின்கம்பங்கள் அருகில் இருந்து தள்ளி நிற்குமாறு வானிலை நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மழை நீர் தேங்கும் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மழை தமிழகத்தின் வறண்ட பகுதிகளுக்கு நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிக மழை பெய்யும் இடங்களில் வெள்ள அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குளுகுளுவென மாறப்போகும் 12 மாவட்டங்கள்..!! மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!!