பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதல், கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல், இரு தரப்பினரும் தனித்தனியாக செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்களை நடத்துவதற்கு வழிவகுத்துள்ளது. ராமதாஸ், பாமகவின் நிறுவனராகவும், அன்புமணி, கட்சியின் செயல் தலைவராகவும் உள்ளனர். இருவருக்கும் இடையே கட்சியின் முழு கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. ராமதாஸ், தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக ஆக்கியது தவறு என்று கூறியுள்ளார், மேலும் அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்று விமர்சித்துள்ளார்

இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிர்வாகிகளை நீக்குவதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உதாரணமாக, சட்டமன்றக் கட்சி கொறடாவாக இருந்த அருளை ராமதாஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததற்காக அன்புமணி நீக்கினார், ஆனால் ராமதாஸ் அவரைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். இப்படியாக இருக்கும் பட்சத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணி தரப்பில் செயற்கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ள நிலையில் அவர்களுடனான செயற்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டிருப்பது அன்புமணிக்கு எதிராக அவர் களம் இறக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: பாமகவில் ட்விஸ்ட்! அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய சகோதரி! பரபரக்கும் அரசியல் களம்

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமைக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.. கட்சி நிறுவனரே தலைவர் பொறுப்பையும் ஏற்ற பின்னரும் தானே தலைவர் என பொதுவெளியில் பேசுவதாக அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் பொதுவெளியில் அன்புமணி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் கட்சிக்கு மட்டுமல்லாமல் நிறுவன தலைவரையும் கலங்கப்படுத்தும் வகையில் அன்புமணி பேசி வருவதாகவும் அன்புமணி பெயரை குறிப்பிடாமல் செயல் தலைவர் என்று மட்டும் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரா? பரபரப்பை கிளப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ்!!