நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நேற்று பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவோரை வரவேற்கும் விதமாக பாஜக நிர்வாகி ஒருவர் நயினார் நாகேந்திரன் உருவத்தை ராமர் போன்று டிசைனிங் செய்து பேனர் வைத்திருந்தார்.
இதை இன்று காலையில் தெரிந்து கொண்ட நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான்.
இதையும் படிங்க: #BREAKING: உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை... பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!
சேது சமுத்திரம் விவகாரத்தில் இராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான்.
நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இது போல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாக்குல நரம்பில்ல! காது, மூக்குல நகை போட்டா ரூ.1000 இல்லையா? KKSSR பேச்சுக்கு நயினார் கண்டனம்..!