வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ‘நீல நிலா’ (Blue Moon) இன்று இரவு வானில் தோன்றும் என கூறப்படுவதால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த நிகழ்வை காண தயாராகி வருகின்றனர். அரிதாக நிகழும் இந்த வானியல் காட்சியை வெறும் கண்களால் ரசிக்க முடியும் என்பதால், வானத்தை நோக்கிய பார்வைகள் அதிகரித்துள்ளன.
பொதுவாக ஒரு மாதத்தில் ஒரே ஒரு பவுர்ணமி மட்டுமே நிகழும். ஆனால் ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தோன்றும் சூழலில், இரண்டாவது முழு நிலவு ‘நீல நிலா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுவதால், இது வானியல் உலகில் சிறப்பு கவனம் பெறுகிறது.
இந்த முறை நீல நிலா நிகழ்வுடன் ‘மைக்ரோமூன்’ எனப்படும் மற்றொரு தனித்துவமான நிகழ்வும் இணைந்துள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிலவு தனது நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருக்கும் நிலையில் முழு நிலவாக தோன்றும் போது அது வழக்கத்தை விட சற்றே சிறியதாகவும் மங்கலாகவும் தெரியும். இதுவே மைக்ரோமூன் என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிலாவில் நிரந்த ஆய்வு தளம்!! நாசா மும்முரம்! மூன்று கட்டங்களை கொண்ட நச் திட்டம்!

வானியல் ஆய்வாளர்களின் தகவல்படி, நிலவு பூமியிலிருந்து சுமார் 4 லட்சத்து 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இதனால், வழக்கமான முழு நிலவுடன் ஒப்பிடும்போது அதன் அளவு சற்றே குறைவாக தோன்றலாம். இருப்பினும், பொதுமக்கள் பெரும்பாலும் இந்த வித்தியாசத்தை எளிதில் கவனிக்க முடியாது என நிபுணர்கள் விளக்குகின்றனர்.
சூரியன் மறைந்த பிறகு கிழக்கு வானில் நிலவு தென்படத் தொடங்கும். மொட்டை மாடிகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் ஏரிக்கரைகள் போன்ற திறந்த வெளிப் பகுதிகளில் இருந்து இந்த காட்சியை சிறப்பாக காண முடியும். இதற்காக தொலைநோக்கி அல்லது சிறப்பு கருவிகள் எதுவும் தேவையில்லை; வெறும் கண்களால் ரசிக்கலாம்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று இதுபோன்ற நீல நிலா நிகழ்வு காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிகழவிருக்கும் இந்த அரிய வானியல் காட்சி, வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!! மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை!