நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாகத் தமிழக மக்களை ஏமாற்றி வந்த தீய சக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தவெக வேட்பாளர்களுக்கு வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று (04.10.2026) மாலையுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த நிலையில், முதல்வர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தொகுதி வாக்காளர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உணர்ச்சிமிக்க மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த மடலில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்; கடந்த சட்டமன்றத் தேர்தலில், எவருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது; உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது; தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி; இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் போராட்டம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட நிர்வாகிகள் கைது!

இடைத்தேர்தல் பிரச்சாரப் பயணத்தை நினைவுகூர்ந்த அவர், கடந்த செப்டம்பர் 25 அன்று மதுராந்தகத்திலும், செப்டம்பர் 30 அன்று தாராபுரத்திலும் முதற்கட்டப் பிரச்சாரம் மேற்கொண்டோம்; இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2 அன்று மதுராந்தகத்திலும், இன்று (அக். 4) தாராபுரத்திலும் வாகனப் பிரச்சாரங்களை முன்னெடுத்தோம்; இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்தபோது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது; எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது; இதற்காக உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளோம் என நெகிழ்ந்துள்ளார்.
எதிர்க்கட்சிகளைச் சாடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர், நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் மக்கள் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது 'விசில்' சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும்; அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த தேர்தல் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், தன்னார்வலர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இறுதியாக, தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம்; லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்; தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்; நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்! என்று முதலமைச்சர் விஜய் சூளுரைத்துள்ளார்.
இதையும் படிங்க: CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!