நெய்வேலி அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் பிடிக்கச் சென்றபோது, போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் காவல் ஆய்வாளர் அவனை துப்பாக்கியால் முழங்காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் ரவுடி ஆனந்தராஜ் (36). இவருக்கும், கீழ் வடகுத்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி கோபி (31) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கோபி மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கோபி தனது கூட்டாளிகள் 18 பேருடன் சேர்ந்து கடந்த 16 ஆம் தேதி நெய்வேலியில் இருந்த ஆனந்தராஜை கொலை செய்யும் நோக்கில் சென்று அவரையும் அவருடன் இருந்தவர்களும் நின்றுகொண்டிருந்தவர்களையும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், இந்திரா நகரைச் சேர்ந்த நரேஷ் என்ற நரேஷ்குமார் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த நரேஷ்குமாரின் தாய் அம்மு (47) அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேரில் 13 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். எனினும், வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி கோபியை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை முத்தாண்டிக்குப்பம் பகுதியில் கோபி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெய்வேலி நகர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினர் முத்தாண்டிகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலவன்குப்பம் சாலை, ஒதியடிவீரன் கோவில் அருகே விரைந்து சென்றனர்.
அங்கு பதுங்கியிருந்த கோபியை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற கோபி, தன்னிடம் இருந்த கத்தியால் போலீசாரை தாக்கினான். இதில், தலைமைக் காவலர் பாண்டியராஜ் (33) என்பவரின் இடது கையிலும் மற்றொரு தலைமைக் காவலரான விஜயலாதசோழன் (36) என்பவரின் இடது முழங்கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
போலீசாரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி கோபியைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், தற்காப்பிற்காகவும் இன்று அதிகாலை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தனது துப்பாக்கியால் கோபியின் வலது கால் முட்டியில் இரண்டு ரவுண்டுகள் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த கோபிக்கு, நெய்வேலி என்.எல்.சி பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோபியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது காயமடைந்த போலீசாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரை தாக்கிய ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.