சேலத்தில் கோவிலையொட்டி மேற்கூரை அமைப்பதில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு. தவெக நிர்வாகி தாக்கியதாக கூறி பச்சபட்டியில் உள்ள போக்குவரத்து துறை
அமைச்சர் வீட்டை ஒரு தரப்பு மக்கள் முற்றுகை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றொரு தரப்பினர் மனு.
சேலம் மாநகர், அம்மாபேட்டை அருகே பச்சப்பட்டி பகுதியில் "விளையாட்டு மாரியம்மன் " கோயில் உள்ளது. இக்கோயில் முன்பு அன்னதானம் வழங்குவதற்காக மேற்கூரையுடன் கூடிய கொட்டகை அமைக்க, கோயில் நிர்வாகியான சின்னதுரை தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக அவர்கள் இன்று மதியம், கோயில் முன்பகுதியில் குழி தோண்டுவதற்கான பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதேப்பகுதியை சேர்ந்த பழனியம்மாள் , சிவலிங்கம் தரப்பினர் வந்து கொட்டகை அமைக்க கூடாது என்றும் கொட்டகை அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோயில் முன்பாக இருதரப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . அப்போது இருதரப்பை சேர்ந்த பெண்கள் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டனர்.
இதையும் படிங்க: "ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கூட உயிருடன் திரும்ப மாட்டார்".... அமெரிக்காவை உச்சக்கட்ட கோபத்துடன் எச்சரித்த ஈரான்...!
அந்த நேரத்தில் சின்னதுரையின் மகனான தவெக 40-வது வார்டு செயலாளரான கொழிஞ்சி என்கிற யுவராஜ் வந்து , கொட்டகை அமைக்க கூடாது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்த பழனியம்மாள் தரப்பினரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு , பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கு எதிர்ப்பு தெரிவித்த சில பெண்களையும் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் , சம்பவ இடம் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில், பழனியம்மாள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர், தங்களை தாக்கிய தவெக நிர்வாகி கொழிஞ்சி என்கிற யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வீட்டிற்கு சென்று முற்றுகையிட்டனர்.
வீட்டில் அமைச்சர் இல்லை என்றும், அவர் சென்னையில் இருக்கிறார் என்று அமைச்சரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது கோயிலில் ஏற்பட்ட பிரச்னை பற்றி தெரிவிக்க வந்துள்ளோம் , தவெக நிர்வாகியின் கொழிஞ்சி பெண்கள் என்றும் பாராமல் எங்களை தாக்கினார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் தெரிவிக்க வந்ததாக. கூறியுள்ளனர்.
அப்போது கிச்சிப்பாளையம் போலீசார் வந்து, அங்கிருந்து பெண்களை சமாதானப்படுத்தி கலைந்து போக வைத்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களான பழனியம்மாள் உள்ளிட்டோர் , கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று தவெக நிர்வாகி கொழிஞ்சி என்ற யுவராஜ் உள்ளிட்ட சிலர் மீது புகார் கொடுத்தனர்.
இதனிடையே சின்னதுரை தரப்பினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து , கோயிலுக்கு கொட்டகை அமைக்கவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ❤️ என்னது..!! ட்ரெயின்-ல FIRST NIGHT கொண்டாட்டமா..!! வைரலான ரொமாண்டிக் பயணம்..!! ❤️