சேலத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா (45). இவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு, சூரமங்கலம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!
ஜாமினில் வெளிவந்த பிறகு சிவா தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் இந்த வழக்கு விசாரணையும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.

சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு, சிவா கடலூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு வாதங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டார். மேலும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியிருப்பது இந்த வழக்கில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் போக்சோ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?