சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளரான வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான நரேந்திர சிம்ஹன், சாந்தி, கணேசன் என மொத்தம் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய நபர்களாகக் கருதப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று முதல் மூன்று நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகசிய இடத்தில் வைத்து இருவரிடமும் நேற்று முதல் தொடர்ந்து விடிய விடிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வீரமணி மற்றும் கணேசன் ஆகியோர் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!
வீரமணி எத்தனை ஆண்டுகளாக சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது, எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வீரமணியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாலியல் வீடியோவை வைத்து சிலர் அவரை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் நிலையில், யார் யார் வீரமணியிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீரமணியைத் தவிர வேறு யாரெல்லாம் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்? இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், எந்தெந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வீரமணி சார்பில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, எவ்வளவு கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது என்பதும் விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரமணி தொடர்பானதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ யார் யாருக்குப் பகிரப்பட்டது என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சாந்தியின் செல்போன் மற்றும் கணேசனின் செல்போனில் இருந்து அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், பிரகாஷ் என்பவரின் செல்போனிலும் அந்த வீடியோ இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அந்த வீடியோவை பயன்படுத்தி வீரமணியை தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டனர் என்பதும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் உள்ளிட்ட சிலரை சாந்தி நாடியதாகக் கூறப்படும் நிலையில், எதற்காக அவர்களை அணுகினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணி தரப்பில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி சாந்தி அவர்களை அணுகினாரா? அவ்வாறு அணுகியதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது சாந்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், அப்போது அவர் என்ன தெரிவித்தார், போலீசார் அவரிடம் என்ன கூறினர், வழக்கை முடித்து வைக்க போலீசாரை அணுகியது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும் தற்போது அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் வீரமணிக்கு பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் மட்டும்தான் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா அல்லது அவருக்குத் தொடர்புடைய வேறு இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றனவா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தகவல்களைப் பெற்ற பின்னர், வீரமணியை சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாந்தி முக்கிய நபராகக் கருதப்படுவதால், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!