பாமகவில் மருத்துவர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் மோதலாக வெடித்ததை தொடர்ந்து பாமகவில் இருந்து தனது மகன் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். இதனால் பாமகவில் மருத்துவர் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னை பாமகவின் தலைவராக அறிவிக்க கோரி மருத்துவர் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையம், தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியை பாமகவின் தலைவராக அங்கீகரிப்பதாக தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும், பாமகவின் கொடி மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மருத்துவர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே அன்புமணி தரப்பு பாமக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வந்தார். சமீபத்தில் ராமதாஸ் நடத்திய முக்கிய ஆலோசனையில் கூடதிமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க இயலாததால், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!
இதனிடையே, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, வி.கே.சசிகலா நேரில் சந்தித்து பேசியுள்ளார். சுமார் மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சமீபத்தில் புதிய கட்சி தொடங்கியுள்ள சசிகலாவும், கூட்டணிக்காக காத்திருக்கும் ராமதாஸும் திடீரென சந்தித்து ஆலோசித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர் அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் எந்த கூட்டணிகள் இணைவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் விகே.சசிகலா நேரில் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இல்லாமல் புது கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் V. சசிகலா மற்றும் ராமதாஸ் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனிடையே சசிகலாவும் திராவிட கட்சிகள் இரண்டும் இல்லாத புதிய ஒரு கூட்டணியை உருவாக்கி வர உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இருவரும் விஜய் உடைய தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கக்கூடும் என பேச்சுகள் கிளம்பியுள்ளன. மற்றொருபுறம் விஜய் பாஜக கூட்டணிக்குச் செல்ல விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் இந்த சந்திப்பின் பின்னணியே தவெகவுடன் ஐக்கியமாவது குறித்து தான் இருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ரொம்ப தப்பான முடிவு... திமுகவில் OPS... சசிகலா கடும் அதிருப்தி..!!