இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை அரணாகத் திகழும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாக்கும் விவகாரத்தில், மத்திய அரசு முன்வைத்த புதிய வரையறைகளை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 2 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த மலைத்தொடரின் 90 சதவீதப் பகுதிகளைச் சுரங்கத் தொழிலுக்குத் தாரைவார்க்கும் வகையில் மத்திய அரசின் பரிந்துரை இருப்பதாகச் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தில் தலையிட்டு இயற்கை வளத்தைக் காக்க முன்வந்துள்ளது.
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி என நான்கு மாநிலங்களில் பரவிக் கிடக்கும் ஆரவல்லி மலைத்தொடர், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சம்பல், சபர்மதி, லூனி போன்ற முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும், வட இந்தியாவின் காற்று மற்றும் நீர் ஆதாரத்தின் ஊற்றாகவும் விளங்கும் இந்த மலைத்தொடரில், சட்டவிரோத சுரங்க வேலைகள் நடப்பதாகத் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியமித்த கமிட்டி, “ஆரவல்லி மலைத்தொடரில் 100 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள நிலப்பரப்புகள் மட்டுமே மலைத்தொடராகக் கருதப்படும்” என்ற புதிய வரையறையைச் சமர்ப்பித்தது. இதனை கடந்த நவம்பர் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்த வரையறையைப் பின்பற்றினால் 90 சதவீத மலைத்தொடர் பாதிக்கப்படும் என்றும், 100 மீட்டருக்குக் கீழ் உள்ள குன்றுகள் சுரங்க முதலாளிகளால் அழிக்கப்படும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. அப்போது, மத்திய அரசின் புதிய வரையறைகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாகத் தலைமை நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நான்கு மாநில அரசுகளும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் பிறப்பித்தார். இந்தத் தடை உத்தரவு ஆரவல்லி மலைத்தொடரின் அழிவைத் தடுத்து நிறுத்தும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026 ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தலுக்கு ரெடி! - "பாஜகவின் வஞ்சகத்தை வேரறுப்போம்!" வைகோ தலைமையில் 7 அதிரடி தீர்மானங்கள்!