தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் (Smart Meter) பொருத்துவதற்காக ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ள அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மின்சார சேவையைத் தனியார் வசம் ஒப்படைத்து ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்த விபரீதத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று (07-10-2026) வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படவுள்ள பேராபத்துகள் குறித்து எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படாத நிலையிலும் கூட, ஒன்றிய பாஜக அரசு அனைத்து மாநில அரசுகள் மீதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களைத் தீவிரமாகத் திணித்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நிதி நெருக்கடியில் மின் வாரியம்!! ரூ.1.86 லட்சம் கோடி மெகா திட்டம்! தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தாமதம்?
கடந்த 2023-ஆம் ஆண்டு திமுக அரசு இத்தகைய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை மிகக் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக அந்த டெண்டரை அரசு திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது ஆட்சிப் பொறுப்பிலுள்ள தவெக அரசும் அதே பாதையில் பயணித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைத் தனியாரிடம் கோரி பணிகளைத் தொடங்கியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று சாடியுள்ளார்.

அண்டை மாநிலமான கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்தபோது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அரசே தனது மூலதனச் செலவில் சோதனை முறையில் துவக்கியதைச் சுட்டிக்காட்டிய பெ. சண்முகம், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களை வரவழைத்து டோட்டெக்ஸ் முறையில் தனியாரிடமே ஒப்படைப்பது அப்பட்டமான முழுமையான தனியார்மய நடவடிக்கையாகும்; இது ஒட்டுமொத்த மின்சார விநியோக சேவையையும் சந்தையின் சூதாட்டத்திற்கு அடகு வைக்கும் பேராபத்து என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகளைப் பட்டியலிட்ட அவர், "தற்போது நடைமுறையில் உள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுத் தொழிலுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சமூகப் பாதுகாப்பு சலுகைகளும் எதிர்காலத்தில் முற்றிலுமாகப் பறிபோகும் அபாயம் உருவாகும்; மின் கட்டணம் மற்றும் மின் விநியோகத்தின் மீதான அரசின் முழுக் கட்டுப்பாடும் பறிபோவதோடு, தற்போது வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் 'உச்சநேரக் கூடுதல் கட்டணம்' இனி சாமானிய மக்களின் வீடுகளின் மீதும் கட்டாயமாகத் திணிக்கப்படும்; இதுதவிர மாநில உரிமைகள், சமூக நீதி மற்றும் மின்வாரிய வேலைவாய்ப்புகளுக்கும் இது சாவுமணியாக அமையும்" என்று எச்சரித்துள்ளார்.
எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் நிர்ப்பந்தத்திற்கும், நவீன தாராளமயப் பொருளாதாரப் பாதையின் அழுத்தத்திற்கும் பணிந்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிக கரெண்ட் பில் வருதா? மீட்டர் ரீடிங் இனி தனியார் வசம்? மின்வாரியத்தின் புது உத்தரவு!