சென்னை: 2026 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க திமுக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இளைஞர்கள் வாக்குகளை குறிவைத்து செயல்படுவதால், திமுகவும் இளைஞர் அணியை வலுப்படுத்தி, அதிக இளைஞர்களை வேட்பாளர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, துணை முதல்வரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உள்ள தனது குறிஞ்சி இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டம் இரவு விருந்துடன் கூடியதாக அமைந்தது. பங்கேற்றவர்களுக்கு மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, மீன் வறுவல், சிக்கன் வறுவல், பிரட் அல்வா, ஆனியன் ரைதா, கத்தரிக்காய் தொக்கு உள்ளிட்ட சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன.
இதையும் படிங்க: திமுகவில் புது குழப்பம்! தியாகராஜன் இருந்தவரை சூப்பர்! உதயநிதி மோசம்!
கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணி ராணுவம் போல கட்டுப்பாட்டுடன் செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். பாஜக தலைவர் ஒருவர் "உதயநிதியை அடக்கி வைங்கள்" என்று முதல்வரிடம் கூறியதை சுட்டிக்காட்டி, இது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கு சான்று என்றார்.

தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை வலியுறுத்தினார். இளைஞர் அணியிலிருந்து சுமார் 40 வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மகளிர் இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் வெற்றிக்கு உதவும் என்ற நம்பிக்கையை திமுக தலைமை வெளிப்படுத்தியுள்ளது. அதேநேரம், அரசு ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் உள்ள அதிருப்திகளை போக்கும் வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இளைஞர் அணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தை "உற்சாகமூட்டும்" என்று வர்ணித்தனர்.
இந்த ஆலோசனை, திமுகவின் தேர்தல் தயாரிப்பில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு அளிக்கும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியா 40 சீட்டு எனக்கு கொடுங்க!! இளைஞரணிக்காக வரிந்து கட்டும் உதயநிதி! ஸ்டாலின் யோசனை!