அணு தொடர்பான கனிமங்களான அரிய மண் தனிமங்கள், யுரேனியம் மற்றும் தோரியம் போன்றவற்றின் அகழ்வுத் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, 2006இன் கீழ் உள்ள பொதுமக்கள் கருத்துக்கேட்புத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கும் வகையிலான ஆணையை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முதன்மையான மக்களாட்சி வழிமுறையை நீக்குவதன் வழியே, இந்த ஆணை சுற்றுச்சூழல் சீரழிவை அதிகப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை ஒடுக்குவதற்கும், சுற்றுச்சூழல் சட்டங்களை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்கும் இவை வழிவகை செய்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கை, 2006, பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்குக் கருத்துக்கேட்பினைக் கட்டாயப்படுத்துகிறது என்றும் இது திட்ட ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் அரசின் பொறுப்புகளை உறுதி செய்கிறது எனவும்பெரும்பாலும் சுற்றுச்சூழல் அபாயகரமான திட்டங்களில் மாற்றங்களை செய்ய அல்லது நிராகரிக்க வழிவகுக்கிறது என்றும் எச்சரித்தார். இந்த அகழ்வுத் திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை செயலற்றதாக்குகிறது என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜயலட்சுமி வழக்கு! சீமானை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்... சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இது போன்ற படிப்படியான நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்களின் ஆலோசனையின்றி நேரடி ஆணையாக வெளிப்படுவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக சூழலியல் விதிகளை சீரழித்துக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திட்ட அனுமதிகளை வழங்கி, இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் போக்கினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தற்போது வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையினைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்ல... வேடிக்கை காட்டும் சிங்கம்! சீமான் செம கலாய்