சென்னையில் நடைபெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் விற்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படும் என்று இணையதளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து, நீதிபதியை தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தகக் கண்காட்சியில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட்ட கீழைக்காற்று பதிப்பகத்துக்கு ஒதுக்கப்பட்ட இரு அரங்குகளிலும் சோதனை செய்தபோது அந்த புத்தகம் எங்கும் விற்பனைக்கு இல்லை என்பது தெரிய வந்தது.
மேலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், கீழைக்காற்று பதிப்பக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில், சர்ச்சைக்குரிய புத்தகம் கண்காட்சியில் வெளியிடப்படவோ விற்கப்படவோ இல்லை என்று உறுதியளித்துள்ளனர்.
இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். நீதிமன்ற உத்தரவு சரியாக நிறைவேற்றப்பட்டதாக கருதி வழக்கை நிறைவு செய்தனர்.
இந்த சம்பவம் நீதிபதிகளின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. புத்தகக் கண்காட்சிகளில் உள்ளடக்க கட்டுப்பாடு, சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து பொதுவான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் வழக்கில் அளித்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த புத்தக விவகாரம் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: ஓயாத திருப்பரங்குன்றம் சர்ச்சை! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! ஹைகோர்ட் அதிரடி தடை!