மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என்றும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சம் என்றார்.
மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்., மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது ஜனநாயக விரோதம். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது..? என்று கேட்டுள்ளார்.

இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா..? என்றும் ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்கு எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எரிக்காற்று உருளை விலை உயர்வு... மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் வைத்த கோரிக்கை..!
தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன் என்றார். தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் ஜனநாயக தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!