உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பெருந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையையும் அளித்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பலர் பெருவெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் கூறினார்.
தாராலி கிராமத்திற்கு அருகில் உத்தரகாசி - ஹர்ஷில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக அப்பகுதியிலிருந்த 10000 தேவதாரு எனப்படும் ஊசியிலை மரங்களை அரசு வெட்டியதே பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலச்சரிவு ஏற்பட முதன்மைக் காரணம் எனக் கூறப்படுவதை சீமான் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: மாடு மேய்க்க இவ்வளவு காஸ்ட்லி கெட்டப்பா? - செட்டப் சீமானின் டீ ஷர்ட், ஷூ விலையைக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்கள்...!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் நம்முடைய பாதுகாப்பு அரண்களாக விளங்கும் மலைகள், காடுகள், மரங்கள், நீர் வழிப்பாதைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிப்பது எத்தகைய பேராபத்தை ஏற்படுத்துகிறது என்பதை, இனியாவது நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று தெரிவித்தார்.
மக்கள் வசதியாக வாழ்வதைக் காட்டிலும் பாதுகாப்பாக வாழ்வது மிக முக்கியம். மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறவிட்ட பிறகு, மரங்களை வெட்டி, கோடிகளைக் கொட்டி அமைத்த நெடுஞ்சாலையால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு என சீமான் கேட்டார்.
இனி வரும் காலங்களில் உயிர்கள் வாழ உகந்த நிலமாக நாம் வாழும் பூமியை அடுத்த தலைமுறையிடம் கையளிப்பதுதான் ஆகச்சிறந்த வளர்ச்சி என்பதை உணர்ந்து இயற்கை வளங்களை அழித்தொழிப்பதை இனியாவது மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இல்லாத எழுச்சியா விஜய்க்கு வர போகுது? பிசாசுக்கு மாற்று பேயா.. சீமான் கடும் விமர்சனம்!