நாமக்கல் பூங்கா சாலையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். நாமக்கல் பூங்கா சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் பிரவீன்குமார், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் பொன்னுமணி, ராசிபுரம் தொகுதி வேட்பாளர் சசிகலா ஆகிய மூன்று வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையாற்றினார்.
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது, ஆட்கள் மாறுகிறார்கள். ஆனால், மக்களுக்கான ஆட்சிமுறை மட்டும் மாறவே இல்லை. திராவிடம் என்பது தத்துவம் எனப் பலரும் நினைக்கிறார்கள், ஆனால் அதன் பொருள் திருடர்கள் என்பதுதான். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த ஆட்சிமுறையே முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும் என சீமான் முழங்கினார்.

என் தேசத்தையே நாசமாக்கிய 'இலவசம்' என்ற சொல்லே எங்களிடம் கிடையாது. தற்போது தேர்தலுக்காக மக்களிடம் ஓட்டுக் கேட்கும் எங்களைப் பிச்சைக்காரன் என்கிறார்கள். ஆனால், இலவசம் என்ற பெயரில் இன்று தமிழ்நாடே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு 10.50 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், மீண்டும் இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் போதவில்லை என்றால், அது 16 ஆயிரமாக உயர வேண்டும் என்றால் அவர்களுக்கு வாக்களியுங்கள்; ஆனால் நாட்டைப் பாதாளத்திற்குத் தள்ளிவிடாதீர்கள் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: 2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!
தொடர்ந்து பேசிய அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, மாற்றத்தை விரும்பினால் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் எங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போடுங்கள். உங்களிடம் இப்படித் தெருத்தெருவாகக் கத்திக் கத்திச் சாவதை விட, என்னை உங்கள் வீட்டிற்குச் சாப்பிட அழைத்து உணவில் விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள் என உருக்கமாகப் பேசியது கூட்டத்தில் இருந்தவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் ஆட்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்வி, மருத்துவம் மற்றும் தூய குடிநீர் ஆகியவை எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். குடிநீரை விற்கும் பெரும் முதலாளிகளைச் சிறையில் அடைப்பேன் என எச்சரித்தார். வீரப் பரம்பரையில் வந்த நமக்கு, விற்கும் மதுபானத்திற்கு 'வீரன்' எனப் பெயர் வைக்கிறார்கள். பல மாநிலங்களில் கள்ளுக்குத் தடை இல்லை, ஆனால் தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. இதனை மாற்ற மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார். விவசாயி சின்னத்திற்கு வாக்களித்தால் நீங்களும், விவசாயிகளும் வாழ்வீர்கள் எனத் தனது உரையைச் சீமான் நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!