டெல்லி: காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக எழுந்திருந்த சசி தரூர் மற்றும் கட்சி தலைமைக்கு இடையேயான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
69 வயதான சசி தரூர் கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் சில செயல்பாடுகளை பாராட்டி வந்தார். 'கட்சியை விட தேச நலனே முக்கியம்' என்று கூறி வந்த அவர், இதனால் கட்சி தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. கேரள சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டத்தை அவர் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சி விட்டு வெளியேறுவார் என்ற வதந்திகளும் பரவின.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கார்கே அறையில் நடந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. சசி தரூர் பின்னர் சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டார். 'பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதம் நடந்தது. கார்கே மற்றும் ராகுலுக்கு என் நன்றிகள். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்' என்று எழுதினார்.
இதையும் படிங்க: சீனா போரில் இந்தியா தோல்விக்கு காரணம் நேரு! சர்ச்சை தீயை பற்ற வைக்கும் சசிதரூர்! பாஜக -காங்., மோதல்!

பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், 'எல்லாம் நன்றாக உள்ளது. நாங்கள் ஒரே பக்கத்தில் இணைந்து செயல்படுகிறோம். நான் எப்போதும் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறேன். எந்த பதவியும் கேட்கவில்லை. ஓட்டளித்த மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதே என் பணி' என்று தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பு கேரள சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. ராகுல் காந்தி சசி தரூரை கட்சிக்கு தேவை என்று உறுதிப்படுத்தியதாகவும், கேரளாவில் முக்கிய முடிவுகளில் அவரை ஈடுபடுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி வட்டாரங்கள் இதை 'நல்ல தொடக்கம்' என்று வரவேற்றுள்ளன.
சசி தரூரின் சுதந்திரமான கருத்துகள் காங்கிரஸுக்கு பலமாக இருந்தாலும், ஒற்றுமை தேவை என்பதை இந்த சந்திப்பு நிரூபித்துள்ளது. எதிர்காலத்தில் கட்சி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல்காந்தி!! கூட்டணிக்குள் குளறுபடி!! திமுக மேலிடங்கள் அதிர்ச்சி!