மத்திய அரசின் அழைப்பை ஏற்று வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்ற எனது முடிவை அரசியல் நோக்கோடு பார்க்காதீர்கள், பொறுப்புள்ள குடிமகனாக கடமையைச் செய்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விளக்கம் அளித்தள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்த நட்பு நாடுகளுக்கும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளுக்கு விளக்கம் அளிக்க 7 கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.
இதையும் படிங்க: ‘தேர்தல் ஆணையமே சமரசம் செய்து கொண்டது, ‘சிஸ்டத்திலேயே’ தவறு இருக்கிறது’.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!
காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு அனுப்பிய 4 எம்.பி.க்கள் பெயரும் இடம் பெறவில்லை, ஆனால், பரிந்துரை செய்யப்படாத சசி தரூர் பெயர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார், மத்திய அரசின் அழைப்பையும் அவர் ஏற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் “நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய 4 எம்.பி.க்களில் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகய், நசிர் ஹூசைன், ராஜா பிரார் ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது. சசி தரூர் பெயர் இடம் பெறவில்லை” எனத் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை நேற்று ஏற்படுத்தியது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மத்திய அரசின் குழுவில் இடம் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மனநிலை குறித்து நட்பு நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்கும் திட்டம் குறித்து பாஜக தலைவர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ என்னிடம் பேசி, இந்த நேரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குத் தெரிவிக்க உங்களின் சேவை தேவை என்று கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்லாமல் வெளியுறவுத்துறை நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருப்பதால் இந்த சேவையை செய்யக் கோரி கேட்டுக்கொண்டார்.

நான் இந்த நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. என்ற கோணத்தில் அனுகவில்லை. பொறுப்புள்ள குடிமகனாக அந்த மனநிலையில்தான் பார்த்து முடிவு செய்தேன். இந்த தேசம் என்னிடம் சேவை செய்ய முடியுமா என்று கேட்கிறது அதற்கு நான் விருப்பமாக இருக்கிறேன் எனத் தெரிவித்தேன். என் முடிவில் அரசியல் நோக்கோடு பார்க்காதீர்கள்.
ஜனநாயக அரசியல் இல்லாமல் அரசியல் இல்லை. இந்தியாவின் வளர்ச்சியில் அனைவரும் பங்குதாரர்கள். பாகிஸ்தானுடன் 88 மணிநேரம் போரிட்டுள்ளோம். என்னுடைய அனுபவம் தேசத்துக்கு தேவைப்படுகிறது, இந்தியனாக தேவைப்படுகிறது என்று கிரண்ரிஜிஜூ கேட்டுக்கொண்டார்.

தேசநெருக்கடியின் போது அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவை சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்க அனுப்பியதில் புதுமை எதுவும் இல்லை. 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு மன்மோகன் சிங் அரசும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொண்ட பல பிரதிநிதிகளை உலக நாடுகளுக்கு அனுப்பியது.
மத்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டது குறித்து நான் எனது கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளேன், தேசியப் பணிக்காக செல்கிறேன் என்று தகவல் தெரிவித்துள்ளேன். நான் எந்தவிதத்திலும் அவமானப்படவில்லை, அவ்வளவு எளிதாக யாரும் என்ன அவமானப்படுத்திவிட முடியாது. நான் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவின் உறுப்பினர், என்னை எளிதாக அவமானப்படுத்த முடியாது. மற்றவர்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லை என்பது தெரியாது, எனக்கு என்னைப் பற்றி தெரியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவோடு நெருங்கும் சசிதரூர்..! காங். பட்டியலில் இல்லாதபோதும் 7 கட்சி குழுவில் இடம் பெற்றது எப்படி?