சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக அமையும் வகையில் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக 134 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த 100 தொகுதிகளில் பாஜகவுக்கு 65 இடங்களும், பாமக கூட்டணியில் இணைந்தால் அக்கட்சிக்கு 30 இடங்களும், தமாகா உள்ளிட்ட சிறு கட்சிகளுக்கு 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: சீமானுக்கு விஜய் வைக்கும் செக்! விஜபி அந்தஸ்து பெரும் காரைக்குடி! காங். - பாஜக பலபரீட்சை!
மேலும், கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணியில் இணைந்தால் அக்கட்சிக்கு சுமார் 18 தொகுதிகள் ஒதுக்க ஏதுவாக பாஜக மற்றும் பாமகவுக்கான இடங்கள் சற்று குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளே இந்த தொகுதி ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி 46.97 சதவீத வாக்குகளுடன் அனைத்து 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.
அதிமுக தலைமையிலான கூட்டணி 23.05 சதவீத வாக்குகளையும், பாஜக-பாமக-அமமுக-தமாகா-ஓபிஎஸ் அணி கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.28 சதவீத வாக்குகளையும் பெற்றது.

39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் 80 இடங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தன. இதன் காரணமாக, அந்த 80 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை (குறைந்தது 75) பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பாஜகவுக்கு 65 தொகுதிகளே ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பாஜகவின் 18.28 சதவீத வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டது. அதிமுக-பாஜக-தமாகா கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், இந்த தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணி வலுவடைந்தால், திமுகவுக்கு கடும் சவால் அளிக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: தனியா 40 சீட்டு எனக்கு கொடுங்க!! இளைஞரணிக்காக வரிந்து கட்டும் உதயநிதி! ஸ்டாலின் யோசனை!