தி.மு.க.,வின் முக்கிய நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளார். சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவரை, கட்சியின் எந்தப் பொதுக்கூட்டத்திலும் பார்க்க முடியவில்லை.
குறிப்பாக, சமீபத்தில் வெளியான ‘ஆடியோ லீக்’ சர்ச்சைக்குப் பிறகு, அவரை எந்தப் பிரசாரத்துக்கும் அழைக்க வேண்டாம் என்று அறிவாலயத்தில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜா தேர்தல் சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. 2ஜி வழக்கில் சிக்கி, 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார். அதன் பிறகு ஏழு ஆண்டுகள் ஓரங்கட்டப்பட்டார். 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் கட்சியில் இடம் பெற்றார். ஆனால் 2021 தேர்தலின்போது அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, கொங்கு மண்டலத்தில் தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: சீட் கிடைக்காத விரக்தியில் குடைச்சல் கொடுக்கும் குட்டி தலைகள்! தீராத தலைவலியில் இடைத்தலைவர்கள்!
இந்த முறை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய 33 தொகுதிகளுக்கு மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜா, தனது திமிர் கலந்த பேச்சு மற்றும் செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தினார்.

அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு உள்ளிட்டோர் அவரது அறிவுரைகளை பொருட்படுத்தவில்லை. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ‘உடன்பிறப்பே வா’ கூட்டத்தில் ராஜாவுக்கும் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு ராஜாவின் பரிந்துரைகள் பல நிராகரிக்கப்பட்டன.
சமீபத்தில் வெளியான ராஜாவின் ஆடியோவில் மறைந்த கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ அதிமுக தலைவர் பழனிசாமியின் பிரசார ஆயுதமாக மாறியுள்ளது. இதனால் தி.மு.க., தலைமை ராஜா மீது கடும் கோபத்தில் இருப்பதாக கட்சி மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவரணி மாநில செயலர் ராஜிவ்காந்தி மீது பாலியல் புகார் பரப்பி அவரை மாற்றியதும் கட்சிக்குள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ராஜா, தேர்தல் பிரசாரப் பணிகளில் இருந்து மெல்ல விலகி வருகிறார். தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்துள்ளார்.
தி.மு.க.,வினர் கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலிலும் ராஜாவால் ஏதோ ஒரு பிரச்னை வருகிறது. தேர்தலுக்குப் பிறகு அவர் முழுமையாக ஓரங்கட்டப்படலாம்” என அஞ்சுகின்றனர்.
இதையும் படிங்க: சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!