சோமாலியா கடற்கரைக்கு அருகே 6 இந்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் பயணித்த சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேமரூன் நாட்டின் கொடியுடன் சென்ற M/V LUTUF என்ற சரக்கு கப்பல், சோமாலியாவின் புன்ட்லாந்து பகுதியில் உள்ள மராயா கடற்கரைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புன்ட்லாந்தின் எய்ல் மாவட்டத்தில் மராயா கடற்கரையில் இருந்து சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 பேர் கொண்ட கடற்கொள்ளையர் குழு இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சோமாலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் மொத்தம் 10 பேர் இருந்தனர். அவர்களில் 6 பேர் இந்தியர்கள். மேலும் ஒரு துருக்கி நாட்டவர், ஒரு ஜார்ஜியர் மற்றும் 2 செர்பிய பாதுகாப்பு வீரர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கப்பலில் உள்ள பணியாளர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவல் வெளியாகவில்லை என்பதால், அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கிய 13 இந்தியர்கள்!! போருக்கு நடுவே உயிர் போராட்டம்! இந்திய மாலுமிகளை மீட்க வலுக்கும் அழுத்தம்!

இந்த சம்பவத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக, M/V LUTUF கப்பலில் துருக்கி நாட்டுக்கான ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவை மொகதிசுவில் செயல்படும் துருக்கியின் ராணுவப் பயிற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கப்பல் கடத்தப்பட்ட பின்னர், அது புன்ட்லாந்தின் நுகால் கடற்கரை பகுதியை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே துருக்கிக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் அந்தப் பகுதிக்கு அருகில் சென்றதுடன், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடற்கொள்ளையர்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்படும் சிறிய படகு கரைக்கு திரும்பிய பின்னர் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 4 பேர் உயிரிழந்து 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்தத் தாக்குதலை யார் நடத்தியது, உயிரிழந்தவர்கள் கடத்தலில் தொடர்புடையவர்களா என்பது இதுவரை சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
இதனால் 6 இந்திய மாலுமிகள் உட்பட கப்பலில் இருந்த அனைவரின் தற்போதைய நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துருக்கி தரப்பில் இருந்தும் உடனடி அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “காலைப்பிடி, டாய்லெட்டைக் கழுவு...” - மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமையாசிரியை மடக்கிப் பிடித்த பெற்றோர்...!