நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்பான விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துள்ளது.
21 நாட்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருந்த சோனம் வாங்சுக், உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி போலீசாரால் சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட பிறகும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாகவும், நரம்பு வழியாக திரவங்கள் செலுத்துவதையும், மருந்துகள் எடுத்துக்கொள்வதையும் மறுத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தனது கணவரின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், சுயாதீன மருத்துவ பரிசோதனைக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறி, அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: NEET விவகாரம் தீவிரம்... ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்! போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்ணா, மருத்துவ சிகிச்சையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும், தற்போதைய சூழலில் இடைக்கால உத்தரவு தேவையில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவருக்கு எதிராக பலவந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. குடும்பத்தினர் 24 மணி நேரமும் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கிடையில், சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், சோனம் வாங்சுக்கின் முக்கிய உடல் செயல்பாடுகள் தற்போது சீராக இருப்பதாகவும், ரத்தப் பரிசோதனையில் சில மாற்றங்கள் இருந்தாலும் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் கல்வி தொடர்பான கோரிக்கைகளை அரசியல் தலைவர்கள் எழுப்புவதாக உறுதியளித்தால் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடிக்கத் தயாராக இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் முடிவு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!